Monthly Archives: June 2015

குளிர்பானம் என்ற பெயரில் உயிர்கொல்லி

மன்னார்குடி மக்களுக்கு எச்சரிக்கை….

குளிர்பானம் என்ற பெயரில் உயிர்கொல்லியினை (poison) அருந்துகிறோம்.

மன்னார்குடி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் காலாவதியான குளிர்பானங்கள், உணவுபொருட்கள் விற்கப்படுகிறது.

மேலும் ஒருசில கடைகளில் காலாவதியான குளிர்பானம் என்று தெரிந்தே அவர்கள் லாபம் பார்ப்பதற்காக விற்க்கப்படுகிறது என்பதுதான் கொடுமை.

இந்த நிலை நீடாமங்கலம், வடுவூர் போன்ற இடங்களிலும் உள்ளது.

இனி எந்தவொரு உணவு பொருட்கள் & குளிர்பானம் வாங்கினாலும் தயாரித்த தேதி மற்றும் காலாவதியாகும் தேதி பார்த்து வாங்குங்கள்.

இதுகுறித்து விரைவில் நமது இயக்கம் மக்களிடம் விழிப்புணர்வு எற்படுத்துள்ளோம்.

மறை நீர் (Virtual Water)

சிந்திக்க வேண்டிய செய்தி!!

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் – இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது” என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

இது இந்திய நிலவரம்!

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு திருந்துமா?????

மன்னார்குடி பேருந்து நிலையம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பேருந்து நிலையம் அருகில் மற்றும் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றி, கடைவீதி எந்த நெருக்கடி இல்லாமல் விசாலமாக உள்ளது.

அனைத்து சாலையோர கடைகளும் அகற்றபட்டது.அந்த வியாபாரிகளுக்கு தகுந்த மாற்று இடம் அமைத்து கொடுக்கும் என நினைக்கிறோம்.

மேலும் இந்த #ஆக்கிரமிப்பு_அகற்றும்_பணி

mannai-bus-stand-encouragement-01 mannai-bus-stand-encouragement-02 mannai-bus-stand-encouragement-03 mannai-bus-stand-encouragement-04

#தற்காலிக_செயற்பாடா ?

#நிரந்தர_முடிவா?

தாய்மொழி

படித்தவர்கள் தங்களை படிக்காதவர்களிடமிருந்து எப்படி வேறுபடுத்தி காட்ட வேண்டும் என்று எண்ணிய போது தொடங்கியதுதான் இந்த ஆங்கில அல்லது பிற மொழி பழக்கம்.

படித்தவர்கள் வேறு மொழியில் பேசும் போது புரியாததால் படிக்காதவர்கள் அவர்கள் எண்ணவோ விஞ்ஞானத்தையும், மருத்துவத்தையும், சமூக மாற்றத்திற்காகவும் பேசுவது போல் எண்ணுவார்கள். படத்திற்கு சென்றதையும், நோய்வாய்ப்பட்டு மருத்துவரை சந்திக்க நேர்ந்ததையும் வேறு மொழியில் எதையோ சாதித்ததை போல பேசுவார்கள். இன்றுவரை பெரும்பாலோனர் செய்து இதை தான். இரத்த கொதிப்பு உள்ளதையும், உணவு பொருள் சீரணிக்கவில்லை என்பதையும் பேசுவார்கள்.

ஆனால் படிக்காதவர்கள் இவர்களை அறிவாளிகள் என்றும், தவறாக பிற மொழியில் பேசினாலும் சரியாகதான் பேசுவார்கள் என்றும் எண்ண தொடங்கினர்.

தவறாக பேசினால் முறையாக படித்தவனுக்கு நன்கு தெரியும் ஆனால் சுட்டிக் காட்ட மாட்டான். ஆனால் படிக்காதவன் தவறென்றால் அந்த இடத்திலோ அல்லது வெளியிலோ சுட்டிக் காட்டும் திறன் கொண்டவன்.

அதன் விளைவு பிற மொழி பேசுபவனெல்லாம் அனைத்தும் தெரிந்தவன், உயர்ந்தவன் என்றும். படிக்காதவன் எல்லாம் இதற்கு சம்பந்தம் இல்லாதவர்கள் என்றும் சமூகத்தில் ஒரு பிம்பம் உள்ளது. இதை உடைக்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது.

இவர்களின் மொழி பழக்கத்தை பார்த்து படிக்காதவர்களும் படித்தவர்கள் என்றால் ஆங்கிலத்திலோ அல்லது பிற மொழியிலோ பேசுபவர்கள் என்று எண்ணத் தொடங்கினார்கள்.

தாய்மொழியில் பேசுவதையே இழிவாக எண்ணியவர்கள், எண்ணுபவர்கள்
தாய்மொழியில் பேசுபவர்களை இழிவாக பார்பவர்கள் ஏராளம்…..

தாய்மொழியில், அதுவும் தமிழ் மொழியில் இல்லாத எதை பிறமொழியில் பேசுவீர்கள் என்று யாராவது ஒருவரால் ஆரோக்கியமான விவாதத்திற்கு முன் வர முடியுமா?

பருப்பு என்று கூறுவதற்கு கூச்சப்பட்டு dhall என்று கூறுவது.
கொண்டை கடலை என்று கூறுவதற்கு கூச்சப்பட்டு Chenna என்று கூறுவது.

இப்படி கூறுவதால் நமக்கொன்றும் பருப்போ, கொண்டை கடலையோ இல்லாமல் பிற உணவு பொருளை அவர்கள் தரப்போவதில்லை.

உலக மயமாக்கல் என்ற பெயரில் உள்ளூரில் உள்ளவர்கள் தங்கள் மொழியையும், தொழிற் நுட்பத்தையும் மேம்படுத்திக் கொண்டிருப்பார்கள். நாம் நம்மையே குறை சொல்லிக் கொண்டு செர்மன், சீன மொழி படித்தால் நன்று என்றும் நம் தாய் மொழியை அழிக்க தொடங்கி விடுவோம்.

ஒன்றை பயன்படுத்தாமல் இருப்பதும் ஒருவகையான அழிப்பே. பேசுவது, எழுதுவதை தவிர்த்தல் போன்றவைகளால்.

படித்தவன் என்பவன் தாய்மொழியை தாழ்த்தாமல் இருப்பவனே தவிர, தாய் மொழி எனக்கு தெரியாது என்று பெருமையாக கூறுவதில் இல்லை. இது வெட்க கேடு.

படிக்காதவனும் தெரிந்த தகவலை விட படித்தவனுக்கு மொழியை பற்றிய தகவல் அதிகம் தெரிந்து இருக்க வேண்டும் அதிக அக்கறையுடன். பிறர் பேசுகின்ற மொழியை பார்த்து உடனே தாய்மொழியை அதன் தனி தன்மை தெரியாமலே குறை கூறுவது சரியல்ல.

ஒரே தாய்மொழியை கொண்டவர்கள் கூட அந்த மொழியை பேச நம்மில் பலர் தயங்குகிறோம். அப்படி என்ன ஒரு இழுக்கு என்று தெரியவில்லை.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன் கூறாதவற்றையா சான் கீட்சும், சேக்சுபியரும் கூறிவிட்டனர்.

ஐயா உள்ளே வரலாமா? (பள்ளியில் ஆசிரியர் முதல் மாணவர்கள் வரை சிரிக்கின்றனர் கூறியவரை பார்த்து)
May I come in sir? (எவரும் சிரிக்கவில்லை)

இங்கே தமிழில் பேசியவர் என்ன தவறாக கூறிவிட்டார்?
ஆனால் ஆங்கிலத்தில் கூறியவர் அப்படி என்ன உயர்த்தி அல்லது தாழ்மையுடன் கூறிவிட்டார்?

இதுதான் இன்றைய கல்வியின் நிலை.

எண் கணிதம் (‡Numerology) மூலம் நம்மின் பல பெயர்கள் மாற்றப்படுகின்றன. குறிப்பாக ’ச்ச்’ என்று சேர்ப்பது. இதையே தமிழில் உங்கள் பெயரை எழுதும் பொழுதும் மாற்றியமைத்தால் அப்பொழுது நம் பெயரின் மதிப்பு நமக்கு தெரியும். தவறாக பிற மொழியில் எழுதினால், பேசினால் ரசிப்பார்கள் ஆனால் அதையே தாய் மொழியில், தமிழ் மொழியில் செய்தால். நமக்கே தெரியும் அதன் விளைவு சமூகத்தில் என்னவாக இருக்கும் என்று.

ஆங்கிலமோ, பிற மொழியோ புரிந்து கொள்ள முடியும். ஆனால் உணர்ந்து கொள்ள முடியாது.

பெருமைக்காக ஆங்கில அல்லது பிற மொழி நூலைப் படிப்பதால் உள்ளம் வெள்ளையாகிவிட முடியாது.

ஆங்கிலமோ, பிற மொழியோ நம் தாய் மொழி தெரியாதவனுடன் உரையாடவே தவிர. நம் தாய்மொழியை தெரிந்தவரிடம் உரையாட அல்ல.

படித்தவன் என்பவன் தாய்மொழியை உயர்த்தி பிடிப்பவனே தவிர தாய்மொழியை பயன்படுத்தபவனை தாழ்த்துவதில் இல்லை..

தேர்தல் துறை

மக்கள் வரிகள் என்ற பெயரில் ஆயிரமாயிரம் கோடிகளை தமிழக அரசிற்கும், இந்திய அரசிற்கும் வருடா வருடம் செலுத்தி இன்று வரை ஒரு பள்ளி கூடத்தை கூட திறன்பட நடத்த திறனானில்லாத ஆளுமையே இன்று நம் சமூகத்தில் நடைபெறுகிறது.

இதற்கெல்லாம் முக்கிய காரணம் தேர்தல் துறையில் இருக்கும் பழைய பயன்படாத விதிமுறைகளே. கேட்டால் எங்களால் தான் சனநாயகம் தலைத்தோங்கி (தலை தொங்கி) உள்ளது என்பார்கள்.

வாக்களிப்பவர்களை ஒருபோதும் கருத்தில் கொள்ளாமல், தாங்கள் செய்வதே சரி என்றவாறு தொடர்ச்சியாக அதையே செய்வது.

கூட்டணி என்ற போர்வையில் ஒவ்வொருவரும் தனித்தனியாக தேர்தலில் களம் இறங்குவார்கள். தேர்தலில் வரும் முடிவைப் பார்த்து மீண்டும் வேறு அணியுடன் சேர்ந்து ஆட்சியை பிடிப்பார்கள்.

மக்கள் வேண்டாம் என்று யாரை புறக்கணித்து இவர்களை வெற்றிப் பெற செய்தார்களோ, தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர்களுடனே மக்களை ஏமாற்றி கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிப்பது. அப்பொழுது தேர்தல் துறை எந்த தலையீடும் செய்வதில்லை.

இதை விட கேவலம், சுயேட்சை என்ற போர்வையில் நின்று வெற்றி பெற்ற பின் பெரும்பாலும் ஆட்சி செய்ய போகின்ற அல்லது இவர்களது துணை வேண்டியவர்களின் கட்சியில் இணைவது. இவர்கள் எவருமே வேண்டாம் என்று சுயேட்சையை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்தால். தேர்தல் முடிந்தவுடனே மக்களை ஏமாற்றுவது. காரணம் கேட்டால், இல்லையென்றால் தொகுதி பணம் ஒதுக்கமாட்டார்கள் என்பது. அப்படியென்றால் எத்தனை சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் தொகுதியை வளர்ச்சியடைய செய்துள்ளனர்.

கட்சி தாவல் சட்டம் போல் ….. சுயேட்சை கட்சி தாவினாலோ மற்றும் தேர்தலுக்கு பிறகு அமைப்படும் கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என்ற சட்டத்தை தேர்தல் துறை கொண்டு வர வேண்டும். ஏனென்றால் இவர்களை மக்களை (வாக்களித்தவர்களை) முடிவு வந்தவுடனே ஏமாற்றிவிடுகிறார்கள்.

ஒருவரே இரண்டு இடங்களில் போட்டியிடலாம் என்ற வாய்ப்பை அளிப்பது. வேட்பாளர் இரண்டு இடங்களிலும் வெற்றிப் பெற்றால் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து பதவி விலக வேண்டும். மீண்டும் தேர்தல் துறை மக்களின் வரி பணத்தில் அந்த தேர்தலை நடத்தும்.

இதில் பணம் விரையமாதலை விட….. காலம் பொன்னாது என்பார்கள், ஆனால் தேர்தல் துறையோ இலட்சக்கணக்காக வாக்காளர்கள் நேரத்தின் மதிப்பை சிறிதும் பொருட்படுத்தாமல். அதே தொகுதிக்கு அடுத்த தேர்தலை நடத்த தயாராகிவிடுகின்றனர். அதற்காக நியமிக்கப்படும் காவல் துறையை வேறெங்காவது பயனுள்ள வகையில் செயற்பட செய்யலாம். அவர்கள் எங்கு வேலையென்றாலும் தயங்காமல் செய்கின்றனர். ஆனால் தேர்தல் துறையோ தவறான முறையில் அவர்களை பயன்படுத்துகிறது.

ஏன் பதவி விலகுபவரின் பணத்தை கொண்டுதான் மறு தேர்தலை நடத்துவோம் என்று தேர்தல் துறை கூறலாமே. இழைத்தவர்கள் வாக்காளர்கள் தானே.

ஒரு மாநிலத்தில் முழுவதுமாக தேர்தலில் தோல்வியுற்ற மத்திய அரசு எப்படி அவர்களின் திட்டங்களை அந்த மாநிலத்தில் வன்முறையாக செயல்படுத்த முடியும்?

ஏனென்றால் அவர்களை வேண்டாம் என்று வாக்காளர்கள் ஏற்கனவே முடிவு செய்துவிட்டார்கள்.

மத்திய அரசின் எந்தவொரு திட்டமும் மாநில அரசின், அதாவது மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் மற்றும் ஆளும் கட்சியின் அனுமதியுடனே செயற்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு முறையும் மாறி மாறி வெவ்வேறு தொகுதிகளில் நின்று தேர்தலில் வெற்றி பெறும் முறையை நிறுத்த வேண்டும். அப்படியில்லையென்றால் வேட்பாளர்களிடம் அதற்காக சரியான காரணத்தை தேர்தல் துறை பெற்று மக்களிடம் தெரிவிக்க வேண்டும்.

தேர்தல் தேதி அறிவிக்கும் பொழுதே, ஒவ்வொரு தொகுதியின் வேட்பாளர்களின் நடப்பு தேர்தல் அறிக்கை என்ன, அதில் அவர்கள் என்ன திட்டத்தை முடித்துள்ளார்கள், கிடப்பில் போட்டுள்ளார்கள், ஆரம்பிக்கவே இல்லை மற்றும் இதற்காக அரசாங்கம் ஒதுக்கிய தொகை எவ்வளவு என்பதையும் தெளிவுபட மக்களுக்க கூற வேண்டும்.

வரி செலுத்துபவர்களிடம் (நேராகவும், மறைமுகமாகவும்) மேற்குறிப்பிட்டவற்றை கூறுவதில்லை என்ன தவறுள்ளது?

இதனால் வாக்காளர்கள் சரியான வேட்பாளரை தேர்ந்தெடுக்க முடியும்.

50% அல்லது அதற்கு மேல் வாக்குகள் ஒரு வேட்பாளர் பெறவில்லையெனில் அவருக்கு எதிராக விழுந்த வாக்குகளின் எண்ணிக்கையே அதிகம் எனும் அடிப்படையில் தேர்தல் முடிவில் எவரும் வெற்றி பெறவில்லையென அறிவிக்க வேண்டும்.

அடுத்த 5 வருடங்கள் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். கண்டிப்பாக மீண்டும் தேர்தல் அதே தொகுதியில் நடைபெற கூடாது. வாக்காளர்களிடம் எத்தனை முறை அவர்களின் முடிவுகளை குறுகிய காலத்தில் மாற்ற கூறுவீர்கள்?

இது மாநிலத்தில் மற்றும் மத்தியில் ஆளும் அரசுகளுக்கும் பொருந்த வேண்டும். ஏனென்றால் இம்முறை மத்தியில் அரியணையில் இருக்கும் அரசுக்கு எதிராக விழுந்த வாக்குகள் 60% மேல்.

60% மேல் மக்கள் இவர்களை வேண்டாம் என்று வாக்களித்தும் எந்த பலனுமில்லை, தேர்தல் துறையின் தவறான விதிமுறைகளால்.

மொழி

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே….
முன் தோன்றிய மூத்தக்குடி தமிழ் குடி….

என்றோ எழுத நினைத்து ஒரு வழியாக இன்று எழுத தொடங்கினேன்.

இன்று நம்மில் பலரும் கூறுவது இவைகளை தான்….
தமிழ் மொழியால் எந்த பலனுமில்லை.
தமிழ் மொழியால் வேலை வாய்ப்பு குறைவு.
தமிழ் மொழியை யாரும் பேசுவதில்லை.
எதற்காக இந்த மொழியை படிக்க வேண்டும்.

நம் முன்னோர்களோ, இன்று உள்ளவர்களோ கூட கூற முடியாத ஆரம்பம். என்றோ படைக்கப்பட்ட பல படைப்புகளால் இன்றும் உலகளவில் பேசப்படும் தமிழ் மொழி. அதே போல் இன்று படைக்கப்படும் அனைத்தும் பிற்காலத்தில் கண்டிப்பாக பேசப்படும். இதை யார் நினைத்தாலும், என்ன செய்தாலும் தடுக்க முடியாது.

ஓலைச் சுவடியிலிருந்து உலகம் முழுவதும் பரந்து விரிந்த மொழி. இன்று உலகமே உள்ளங்கையில், நம்மில் யார் எந்த படைப்பை வெளியிட்டாலும் அடுத்த விநாடியே அனைவரும் பார்க்கும் வண்ணம் உள்ள தொழிற்நுட்பம்.

தமிழுக்கு பின் உருவான பல மொழிகள் உருகுலைந்துவிட்டன. தமிழ், சீனம் ஆகிய இரு மொழிகள் மட்டும் இன்றும் உயிருடன் இருக்கும் பழமையான மொழிகள். ஏனைய மொழிகள் அழிந்துவிட்டன.

மொழியென்றுமே தானே வளர்வது கிடையாது, ஒவ்வொருவரின் பங்களிப்பே இன்றைய தினம் நாம் பயன்படுத்தும் தமிழ் மொழி. நம்மை போன்று அதற்கொன்றும் ஓர் உயிர் கிடையாது. அப்படி இருந்தால் 70 முதல் 100 வருடங்களில் அது அழிந்து இருக்கும். ஆனால் தமிழ் மொழி பலரின் உயிரால் பின்னப்பட்டது. அவ்வளவு எளிதில் சிதைத்து விட முடியாது.

இவை எதையுமே அறியாமலே நம்மில் பலர் மேற்கூறியவற்றை தினம் தோறும் கூறி நம் மீது நாமே எச்சிலை உமிழ்கின்றோம்.

எந்த மொழி வளர்ச்சியடைகிறதோ, அந்த மொழியை படித்தால் உடனே வேலை வாய்ப்பு, பணம் என்ற வியாபார யுத்தியாக புகுத்தி கல்வி நிலையங்கள் அதை பணமாக மாற்றுகின்றன. பின் நம்மில் பலரும் வேறு வழியின்றி பிள்ளைகளின் நலனை கருதி பள்ளியில் சேர்க்க வேண்டியதாகிறது.

இப்படி நாம் அழித்தவைகள் ஏராளம். ஆனால் உருவாக்கியவை?????

யாரோ ஒருவரின் உழைப்பில் உருவான மொழியை எந்தவொரு உழைப்புமின்றி தம் மொழி போல் புகழ்வதை விட இகழ்ச்சி வேறேதும் கிடையாது. உலக அளவில் அதிகம் பேசப்படும் மொழி சீனம், அதற்கடுத்தபடியாக தான் ஆங்கிலம்.

சில வருடங்களில் நம் ஊரில் உள்ளவர்கள் அடுத்தப்படியாக சீன மொழிதான் நம் தேசிய மொழி என கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இன்னும் குறுகிய காலத்தில் பிற மொழி பேசுபவர்கள் நம்மூரில் நமக்கு முன்னுரிமை தருவதாக அவர்கள் கூறுவார்கள். பின் தாய் நிலத்தில் அகதியாக வாழ வேண்டியதுதான்.

ஆங்கில மொழியில் எழுத்தாளர்கள் வருமானம் ஈட்டும் அளவிற்கு தமிழ் மொழியில் ஈட்ட முடிவதில்லை. முதலில் தமிழ் மொழி அடிப்படையில் இன்னும் பெரும்பாலனோருக்கு வருமானம் வரும் வகையில் சூழல் உருவாக்கப்பட வேண்டும். சேவை சேவை என்று கூறி மொழியிலுள்ள வாய்ப்புகளை இழக்க வேண்டாம்….. இனி வரும் காலங்களில் சேவை உதவாது.

எங்களின் அடையாளங்களை அழிப்பது…. எங்களை அழிப்பதற்கு சமம்….

இரு தினங்களுக்கு முன் என்னுடன் வேலை புரியும் நண்பருடன் (வட இந்தியர்) இந்தி திணிப்பு பற்றி விவாதிக்க நேர்ந்தது, ஆரோக்கியமான விவாதம்தான்….

உரையாடியது ஆங்கிலத்தில்தான்…. ஆனால் தமிழில் எழுதியுள்ளேன்.

இந்தி மொழி திணிப்பு என்பதை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம். எங்களுக்கு என்று ஒரு தாய்மொழி உள்ளது என்றேன். அவரோ இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றார். ஆனால் நானோ அவரவர் தாய்மொழியை காப்பதை விட எங்கிருந்தோ வந்த இந்தியை சுமப்பதில் எந்த வித நியாயமும் இல்லை என்றேன்.

இந்தி மொழியை பேசுபவர்கள் படிக்காதவர்கள், தினசரி குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்பவர்கள் என்ற எண்ணம் அப்பகுதியில் அதிகம் இருப்பதாலேயே இன்று மத்திய அரசு இத்தகைய அறிக்கையை வெளியிட்டது என்றார்.

நாம் மிகவும் கவனிக்க வேண்டியது மேலே கூறியவற்றைதான்…. ‘ஏன்னென்றால் இந்தி பேசினால் நாகரிகம், வேலை வாய்ப்பு, பணம் என அனைத்தும் கிடைத்து விடும் என்பது ஒரு மாயை என்பதை.’

உங்கள் தாய்மொழியின் இன்றைய நிலைமை என்ன என்றேன்?

மெய்திலி (–Maithili) எனது தாய்மொழி. எங்கள் வீட்டில் இருக்கும் போது தாய்மொழியில் பேசுவோம். வெளியில் வந்தவுடன் இந்தியில் பேசுவோம் என்றார்.

முதல் முறையாக இந்த மொழியின் பெயரை இப்பொழுதுதான் கேள்விப்பட்டேன். இப்படிதான் பல மொழிகளை அழித்துவிட்டது இந்த அரசு.

இதுதான் இன்றைய இந்திய மொழிகளின் நிலைமை. ஒரு மொழியை பயன்படுத்தாமல் இருப்பதும் ஒரு வகையான அழித்தலே என்றேன்.

இந்தி மொழியை பேசினாலே படிக்காதவர்கள் என்ற எண்ணத்தில் உள்ளவர்களை மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. அவர்களை குறை சொல்லி பயனில்லை. ஏனென்றால் அவர்களும் ஆங்கில மொழியின் வளர்ச்சியால் பாதிக்கப்பட்டு இந்தி மொழியை மீட்டெக்க முயற்சி செய்கின்றனர்.

இறுதியாக நான் கூறியது: எங்களின் அடையாளங்களை அழிப்பது, எங்களை அழிப்பதற்கு சமம். இதை நீ உணர்வது கடினம், ஏனென்றால் உங்களுக்கு எங்கள் மொழியின் மதிப்பு தெரியாது என்றேன்.

நாம் செய்ய வேண்டியது இது தான்…. நம் மொழியை அழிக்கிறார்கள் என்று கூறுவதை விட. நம் போராட்டத்தோடு, மொழியை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்வது எப்படி என்றே யோசிக்க வேண்டும்.

அதற்கு முதற்படியாக தாய்மொழி (தமிழ்) பயின்றவர்களுக்கும், தாய்மொழி வழி கற்றவர்களும் வேலை வாய்ப்பினை அதிகப்படுத்த வேண்டும். வேலை வாய்ப்பின் அடிப்படையில் மட்டுமே எந்தவொரு மொழியும் வளர்ச்சியடைய முடியும். அதையும் மீறி இத்தனை ஆண்டுகள் தமிழ் மொழி வாழ்கிறதென்றால் அதற்கு பலரின் பங்களிப்பே காரணம்.

பெற்றோர்களும் வேலை வாய்ப்பின் காரணமாகவே ஆங்கில வழி கல்விக்கு முன்னுரிமை தருகின்றனர்.

முதலில் இதுவரை தாய்மொழியில் பயின்றவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையிலும், அவர்கள் வாழ்க்கை சிறப்பாக நடைபெறும் வகையிலும் வாய்ப்புகளை உருவாக்கினாலே இனி வரும் காலங்களில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை தாய்மொழி கல்வியில் சேர்ப்பதை விரும்புவார்கள்.

திட்டங்கள்

வணக்கம் தோழர்களே…. நண்பர்களிடம் இருந்து பெற பெற்ற திட்டம் தொடர்பான ஆலோசனைகள் உங்கள் பார்வைக்கு…..

  • நீர்நிலைகள், வாய்கால்கள் மேம்படுத்துதல்
  • கருவேல மரங்களை அழித்தல்
  • பூங்காக்கள் சீரமைத்தல்
  • கால்நடைகள் பொது இடத்தில் ஏற்படுத்தும் பிரச்சனைகள்
  • பின்லே பள்ளி மைதான ஒழுங்குபடுத்துதல்
  • பேருந்து நிலைய கழிப்பிட தூய்மை
  • விற்கப்படும் பொருள்களின் தரம் மற்றும் காலாவதி பிரச்சனைகள் .
  • நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு
  • தாமரை குளம் மேல்கரை நடைபாதை வியாபாரம் அமைப்பது பற்றி
  • தாமரை குளம் மேல்கரை மற்றும் பந்தலடி நகராட்சி கழிப்பிடம் ஒழுங்கு படுத்துதல்
  • பள்ளி மாணவர்களை வைத்து விழிப்புணர்வு பேரணி
  • மரம் நடுதல்
  • தாழ்த்தபட்டோர் மயான பூமி இட பிரச்சனை.
  • இயற்கை விவசாயம் மற்றும் பூர்விக உணவு முறை மாற்றம் தொடர்பான விழிப்புணர்வு.

அனைவரும் தங்களுக்கு தெரிந்த பிரச்சனைகளை பதிவிட்டால், நாம் அடுத்த கட்டத்தை நோக்கி செல்லலாம்.

மேலும் உங்கள் நண்பர்கள் , வீட்டில் உள்ளவர்களிடமும் கேட்டு பதிவிட்டால்

நாம் அடுத்து செய்ய வேண்டியவற்றிற்கு சீக்கிரமாக நம்மை தயார் படுத்தி கொள்ளலாம்.

நன்றி.

பூங்கா அமைப்பு

வணக்கம் தோழர்களே….

மன்னையின் மக்களுக்கும், புகையிரத பயணிகளுக்கும் பயனளிக்கும் வகையில் எங்களது முதல் திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதோ அதைப் பற்றிய கூடுதல் தகவல்….

திட்டம்: பூங்கா
இடம்: மன்னார்குடி புகையிரத நிலையம்
திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள்: மே 01, 2015
திட்டத்திற்கான  மொத்த தொகை: ரூ . 45,000/-
இதுவரை உறுப்பினர்களிடம் பெற்ற தொகை: ரூ . 22,000/-

Nammalvar Park Mannai Railway Station Nammalvar Park Mannai Railway Station Nammalvar Park Mannai Railway Station mannai-railway-station-park-04 mannai-railway-station-park-05 mannai-railway-station-park-06 mannai-railway-station-park-07 mannai-railway-station-park-08 mannai-railway-station-park-09 mannai-railway-station-park-10 mannai-railway-station-park-11 mannai-railway-station-park-12 mannai-railway-station-park-13 mannai-railway-station-park-14 mannai-railway-station-park-15 mannai-railway-station-park-16 mannai-railway-station-park-17 mannai-railway-station-park-18 mannai-railway-station-park-19 mannai-railway-station-park-20 mannai-railway-station-park-21 mannai-railway-station-park-03 Mannai Railway Station Park - Progress Mannargudi Railway Station Mannargudi Railway Station Park Mannargudi Railway Station Park

நன்கொடை வழங்கிய நல் உள்ளங்கள்
திரு. கோபிநாத் ₹1000
திரு. விஜய் ₹1000
திரு. சதிஷ்குமார் ₹100
திரு. சக்தி (சிங்கப்பூர் ஆப்டிக்கல்ஸ்) ₹500
திரு. ஜீவானந்தம் ₹1000
திரு. சிவா ₹1000
திரு. மணிவண்ணன் ₹2153
திரு. தினேஷ் ₹500
திரு. ஓம்பிரகாஷ் ₹200
திரு, ரபீக் ₹1000
திரு, விதுபாலன் ₹1000
திரு, ராம் ₹200
திரு, ஜவகர் ₹200
திரு, செந்தில்குமரன் ₹100
திரு, பரத் ₹100
திரு, அசோக் ₹1000
ஜெய் டைலர் ₹500
திரு, கார்த்திக் ₹500
திரு, மகேஷ் ₹500
திரு, சுரேஷ் ₹ 1000
திரு, குணாசேகரன் ₹1000
திரு. அழகரசன் ₹500
திரு. ஆகாஷ்  ₹ 500

மேலும் பூங்கா தொடர்பாக பணம் கொடுக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த வாரத்தில் கொடுத்தால் உதவியாக இருக்கும்.

வங்கி கணக்கு விவரம்….

Account Holder: R. Vignesh
Account Number: 003301013082
ICICI Bank
IFSC Code – 000033
Perianaickenpalayam Branch

பூங்கா கட்டுமான பணிகள் முடிவடைந்ததும். கணக்குகளை தங்கள் அனைவரிடமும் பகிர்கிறேன்.

பூங்கா அமைக்கும் பணிக்காக முன்பணம்  ₹12,000 கொடுத்துள்ளோம். (11-06-15) முதல்   கிரில் வெல்டிங் பணி தொடங்கியது . 2 நாட்களில் பணி நிறைவுற்றுவிடும்.

நன்றி
மன்னையின் மைந்தர்கள்

மன்னை மைந்தர்கள்

மன்னையின் மைந்தர்கள் குழு தங்களை அன்புடன் வரவேற்கிறது. எளிய மக்களின் முயற்சியால் தொடங்கப்பட்டு இன்று பலரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செயல்பட தொடங்கி உள்ளது.