மன்னையின் மைந்தர்களால் மன்னார்குடி மக்களிடம் இருந்து பெறப்பட்டு
மன்னார்குடி சட்டமன்ற வேட்பாளர்களிடம் வைக்கப்படும் கோரிக்கைகள்…
1. புதிதாக மரங்களை நடுவதுடன் பழைய மரங்களை வெட்டாமல் பராமரிக்க வேண்டும். மன்னையில் வெட்டுவது சீமை கருவை மரங்களை அழிப்பதற்காக மட்டுமே இருக்க வேண்டும்.
2. மக்கும் குப்பைகளை இயற்க்கை உரமாகவும், மக்கா குப்பைகளை மறு சுழற்சி செய்யவும் முறையான ஒரு மையம் அமைத்து நெகிழி (பிளாஸ்டிக்) பை பாதிப்பு இல்லாத ஊராக மாற்ற வேண்டும்…
3. மழை நீர் சேமிப்பு மற்றும் மேலாண்மையில் முன்னோடியாக இருந்த மன்னர்குடியின் ஆறு, குளம், வடிகால், வாய்க்கால், உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகலையும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டு தூர்வாரி மழை நீர் சேமிப்பு தொட்டி தேவை இல்லாத ஊராக மாற்ற வேண்டும்.
4. மன்னையில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவதன் மூலம் பாமணி ஆற்றில் கலக்கும் கழிவு நீரை தடுத்து பாமணி ஆற்றில் குழந்தைகளை விளையாட விடக்கூடிய அளவுக்கு சுகாதாரமான பொழுதுபோகும் இடமாக மாற்ற வேண்டும்.
5. ஆக்கிரமிப்புகள் இல்லாத நல்ல வசதியான தரமான அணுகு சாலைகள், புதிய சொகுசான பேருந்துகள் மற்றும் சிறந்த கழிவறை கொண்ட நாற்றம் இல்லாத பேருந்து நிறுத்தம் போன்றவைகளை அளிப்பதன் மூலம் மன்னார்குடியை சிறந்த சுற்றுலா தளமாக மாற்றவேண்டும்.
6. தமிழ் நாடு சுற்றுலா கழகத்தின் மூலம் மன்னார்குடிக்கு சுற்றுல்லா பேருந்துகள் வர ஏற்பாடு செய்வதன் மூலம் மன்னர்குடியின் பொருளாதார வேலை வாய்ப்பு வளர்ச்சிக்கு ஊக்கம் கிடைக்க செய்ய வேண்டும்.
7. ஆண்டுக்கொரு முறை “மன்னை திருவிழா” என்ற பெயரில் கலை, இலக்கியம் தொடர்பான விழாவாக ஏற்பாடு செய்வதன் மூலம் உள்ளுரில் உற்பத்தி ஆகும் பொருட்களை சந்தைப்படுத்த வழிவகை கிடைப்பதன் மூலம் மன்னார்குடி வியாபார பொருளாதாரத்தை பெருக்க வேண்டும்.
8. கடை தெரு, பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு அருகில் உள்ள மது பான கடைகளை அகற்றி பொதுமக்கள் அச்சமின்றி இரவிலும் வெளியில் வர கூடிய ஊராக மாற்ற வேண்டும்.
9. மாணவர்களுக்கான அரசு பள்ளி தேவை. அரசு கலை கல்லூரியின் தரம் மற்றும் அதிக மாணவர்களை சேர்க்க தேவையான உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும்.
10. விவசாய கல்லூரி ,பாலிடெக்னிக் ,பொறியியல் மற்றும் செவிலியர் கல்லூரி போன்றவைகளை அரசாங்கம் மூலம்௳ அமைக்க வேண்டும்.இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு தேவையான பயிற்சி வழங்க வேண்டும்.
11. பட்டதாரி மாணவ மாணவியர் மற்றும் இளைய சமுதாயத்தினர் பயன்பெறும் வகையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வேலை வாய்ப்பை உருவாக்க கூடிய தொழில்களை தொடங்க வேண்டும்…
ஊரில் உள்ள ஒரே ஒரு அரசின் பாமணி உர ஆலையை தரம் உயர்த்த வேண்டும்….
12. நூலகம் ,சமுக நல கூடம் , விளையாட்டு மைதானம், உடற் பயிற்சி கூடங்கள் பகுதி வாரியாக அமைத்து அதற்க்கு தேவையான புத்தகங்கள், உபகரணங்களை கொடுத்து பராமரிக்க வேண்டும்…
13. சட்ட மன்ற உறுப்பினர் மாதம் ஒரு முறை குறிப்பிட்ட நாளில் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி கலந்துரையாட வேண்டும்.
14. தன்னுடைய முயற்சியால் நிறைவேற்ற வேண்டிய, நிறைவேற்ற கூடிய அரசின் திட்டங்கள், அறிவிப்புகள், தொகுதிக்கான நிதி போன்ற விவரங்கள் மக்களுக்கு சேரும் வகையில் இதழ்கள் மற்றும் இணைய வழியாக தெரியப்படுத்த வேண்டும். சுய விளம்பரமாகவும் செய்யலாம்.
15. ஷேல் எரிவாயு மற்றும் மீத்தேன் போன்ற பூதம் எந்த பெயரில் வந்தாலும் எங்களுடைய வாழ்வாதாரத்தை கெடுத்து நிலத்தடி நீரை இல்லாமல் செய்யும் சுற்றுசூழலை மாற்றி கெடுக்க கூடிய திட்டங்களை நம் மண்ணில் எக்காலத்திலும் தெரிந்தும் தெரியாமலும் அனுமதிக்க கூடாது.
பல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த இயற்கையாக உருவாகி உள்ள உலகமே பொறாமை பட கூடிய செழுமையான காவேரி டெல்டா தன்னுடைய தனித்துவமான விவசாய விளை நிலங்களை சமுதாய முன்னேற்றம் என்ற பெயரில் வீட்டு மனைகளாக ஏற்கனெவே இழந்து விட்டோம். மேற்கொண்டு தொழிற்சாலை என்ற பெயரில் இழக்க அனுமதிக்க கூடாது. இதற்கு காவிரிப்படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க செய்ய வேண்டும்.
மன்னார்குடி மக்களுக்காக சேவை செய்ய ஆவலுடன் போட்டியில் இறங்கி இருக்கும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் மன்னை மைந்தர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம்.
