கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மன்னார்குடியின் பழைய புகைப்படங்கள் மற்றும் தகவல்களை திரட்ட துவங்கிய மன்னையின் மைந்தர்கள் அணியினரால் இந்த ஆண்டு, முதல் முதலாக மன்னார்குடி 154 ஆண்டு நிறைவையொட்டி 29-11-2019 அன்று புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது.
அதுவும் நம் மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியின் ஒத்துழைப்புடன் அவர்களின் அரங்கத்திலேயே நடைபெற்றது. மன்னார்குடியின் பழமையையும் பாரம்பரியத்தையும் விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மன்னார்குடியில் பழமையான தோற்றம், கோயில்கள், விடுதலைபோராட்ட வீரர்கள், கலைச் சின்னங்கள், அரசியல்வாதிகள் என அரிய புகைப்படங்களின் தொகுப்பாக வைக்கப்பட்டிருந்த இந்த கண்காட்சியினை மருத்துவர் இலரா.பாரதி செல்வன் அவர்கள் துவக்கி வைத்தார்.
கண்காட்சியில் 150க்கும் மேற்பட்ட மன்னார்குடி தொடர்பான தகவல்கள் புகைப்படங்களாக இடம்பெற்றிருந்தன. பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கண்காட்சியினை கண்டு வியப்படைந்தனர். தொடர்ந்து மன்னார்குடி 154 எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் தலைவர் சி.ராம் தலைமை வகித்தார். சி. நிரஞ்சன் வரவேற்று பேசினார்.
மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் எஸ். அன்பரசு, 1866 ஆம் ஆண்டு முதல் 154 ஆண்டுகளாக மன்னார்குடி நகராட்சியின் செயல்பாடுகள், பதவி வகித்த நகரமன்ற தலைவர்கள், ஆணையர்கள் மற்றும் நகரத்தின் அமைப்பு குறித்து பேசினார். தமிழ் இந்து நாளிதழின் நிருபரும் எழுத்தாளருமான எஸ். கோபாலகிருஷ்ணன், மன்னார்குடியின் விடுதலைப் போராட்ட வீரர் காக்காஜி ராமசாமி, உயர்நீதிமன்ற முதல் தமிழ் நீதிபதி முத்துசாமி ஐயர், விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்று தொடர்ந்து அமைந்த மத்திய அரசின் ரயில்வே துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்த கும்மட்டி திடல் சந்தானம் ஐயங்கார் கலைத்துறையில் தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களோடு இணைந்து பல நாடகங்களில் நடித்த எம்.ஜி. நடராஜ பிள்ளை ஆகிய மண்ணையும் மைந்தர்களை பற்றி விளக்கிப் பேசினார்.
பூண்டி கல்லூரியின் ஓய்வு பெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியர் டாக்டர் பூரணச்சந்திரன் 1500 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள மன்னார்குடி நகரத்தின் வரலாற்று நகரமைப்பு, உப்பு சத்தியாகிரகத்தில் மன்னார்குடி மனிதர்களின் பங்களிப்பு, தமிழக முன்னாள் முதல்வர்கள் ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆகியோருக்கு நெருக்கமாக இருந்த மன்னை நகர அரசியல் பிரமுகர்கள், கதராடை இயக்கத்தில் மன்னார்குடியின் பங்கு ஆகியவைப் பற்றி விளக்கிப் பேசினார்.
நிறைவாக ஜி.டி. மகேஷ் நன்றி கூறினார். சதீஷ்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கருத்தரங்கத்தையும் புகைப்பட கண்காட்சியும் மன்னையின் மைந்தர்கள் அமைப்பின் பொறுப்பாளர்கள் ஆர். ராஜசேகர், செந்தில். பக்கிரிசாமி, ஜி. விஜயவர்மன், சி.ரஞ்சித், ஓம். பிரகாஷ், மணிகண்டன், ராஜேஷ் மற்றும் வசந்தன் ஆகியோர் சிறப்பாக கையாண்டார்கள்.
இந்நிகழ்ச்சியில் சிறுதானிய கஞ்சி மற்றும் புட்டு நமது உழவன் அங்காடி சார்பாக வழங்கப்பட்டது.
மழையையும் பொருட்படுத்தாமல் புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கத்திற்கு வந்து விழாவை சிறப்பித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எங்களின் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஒளிப்பட தொகுப்பை தங்கள் பார்வைக்கு கீழே பகிர்ந்துள்ளோம்.
















































































































































